தொழிற்கல்வி

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு'
'நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரும் நாடு'
      - என்று ஒரு நாட்டின் பெருமையையும், ஒரு நாடு இருக்க வேண்டிய முறைமையையும் கூறுவார் திருவள்ளுவர். நாம் நாடிச் செல்லாமல், அனைத்து வகைச் செல்வங்களும் நம்மை நாடி வருவதே சிறந்த நாடு என்கின்றார் அவர். ஆனால் இன்றோ 'பல்குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல் குறும்பும்' ஏற்பட்டு, வந்தாரை வாழ வைக்கும் நம் இந்திய பூமியில் சொந்த நாட்டு மக்களே வேலையின்றித் தவித்தும், வெளிநாடுகளுக்கு ஒடியும் பிழைக்க வேண்டி உள்ளது. 'திரைகடலோடியும் திரவியம் தேடு' என்ற பழமொழி சிறந்ததே என்றாலும், இதன் உட்பொருள் உள்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது என்பதேயாகும். அதாவது வெளிநாட்டுக்குப் போ என்பதுதான். அப்படிப் பல துன்பங்களையும் தருகின்ற வேலையில்லாத் திண்டாட்டத்தை நீக்கவும், நம் வாட்டத்தைப் போக்கவும் நாம் செய்ய வேண்டியது 'ஒரு தொழிலை செவ்வனேக் கற்று சிறப்புடன் வாழ்வதே ஆகும்'. இதையே பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்
      செய்யும் தொழிலே தெய்வம் – அந்தத் திறமைதான் நமது செல்வம் – என்று தொழிலின் இன்றியமையாமையை உணர்த்திப் பாடினார். இத்தொழிற்கல்வி பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

 தொழிற்கல்வி என்றால் என்ன :-
      நாம் வாழும் வழியை தெளிவுபடுத்தும் கல்வியை நூற்கல்வி என்றும், தொழிற்கல்வி என்றும் இரு வகைப்படுத்தலாம். செய்முறைப் பயிற்சி ஏதுமின்றி நூல்களின் வழியாகப் பெறும் அறிவினை நூல்கல்வி என்று கூறலாம். ஏதேனும் ஒருவகைத் தொழில் செய்வதற்கு வேண்டிய பயிற்சி அளிக்கும் கல்வியைத் தொழிற்கல்வி என்று கூறலாம்.

வாழ்க்கைக் கல்வி அல்லது தொழிற்கல்வி
   வேலை வாய்ப்பைத் தேடுபவனும, வேலையில்லாத் திண்டாட்டத்தை நீக்க எண்ணுபவனும் வெறும் ஏட்டுப் படிப்பை மட்டும் பயிலக் கூடாது. ஏனெனில், 'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது' என்பதை உணர்ந்து வெறுங்கல்வியை விட வாழ்க்கைக் கல்வி அதாவது, வாழ்க்கைக்குத் தேவையான தொழிற்கல்வியைப் பயிலுதல் வேண்டும். மேலும், ஒரு தொழிலைச் செய்யும் போது அதற்குத் துணையான சில உபதொழில்களையும் மேற்கொள்ள வேண்டும்.
'வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று'  - என்பதற்கேற்ப ஒரு தொழிலைச் செய்து கொண்டே மற்றொரு தொழிலையும் செய்வது, ஒரு யானையைக் கொண்டு மற்றொரு யானையைப் பிடிப்பதற்குச் சமம் என்கிற வள்ளுவரின் சொல்லை மறவாது பின்பற்றினால் வேலைவாய்ப்பும் பெருகும். வேலையின்மையும் ஒழியும். பொருளும் சேரும். சேர்க்கும் பொருளை தீமையில்லா வழியில், சேர்க்கும் திறமறிந்து சேர்க்க வேண்டும். இதனையே குறளும்,
'அறன்ஈனும் செல்வமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்' - என்று உரைக்கின்றது.

கல்வி முறையில் மாற்றம்

'கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை'
      என்று தெய்வப்புலவரும், 'உட்பொருளை அறியாமல் பகவானை அடையும் பொருட்டு செய்யும் சாஸ்திரப் பயிற்சியை விட சாத்திரஙகள் மூலம் கிடைக்கும் ஞானம் அதாவது கல்வி சிறந்தது' என்று _கிருஷ்ண பரமாத்மா தன்னுடைய கீதையிலும் கூறுகின்றனர். இங்கு ஞானம் அல்லது கல்வி என்றால் சத்சங்கத்தாலும், சாத்திரப் படிப்பாலும் உண்டாகும் அறிவு என்று பொருளாகின்றது.

'கற்கை நன்றே கற்கை நன்றே
      பிச்சை புகினும் கற்கை நன்றே'
    என்று ஒளவையும் கல்வியின் சிறப்பை விளக்குகின்றார். எனினும், தற்போது நமது மாணாக்கர்கள் மற்றும் இளைஞர்கள் கற்கும் கல்வியானது மெக்காலே கல்வி எனப்படும் மனப்பாடக் கல்வியே ஆகும். இக்கல்வியில் சில நன்மைகள் இருப்பினும், அதிகளவில் தீமைகளே இருக்கின்றன. முதலில் இது முழுமையான தன்னம்பிக்கை உடைய ஒரு மனிதனை உருவாக்கும் கல்வியே அல்ல. வெறும் எதிர்மறைக்கல்வி ஆகும்.
    சுயசிந்தனை இல்லாதவனால், பிற வேலை வாய்ப்புக்களைப் பெறவோ, சுயவேலை வாய்ப்புக்களை உருவாக்கவோ இயலாது. ஏனவே, வேலை வாய்ப்புகளை அடிப்படையாகக் கொண்ட சிறந்த கல்வி முறை வருதல் வேண்டும். நாம் அதனை முயன்று நம் பாரத தேசத்திற்கேற்ப உருவாக்கல் வேண்டும். இது மிகப்பெரும் திட்டம் என்ற போதிலும் இதனை நாம் உருவாக்கியே தீர வேண்டும். இக்கல்வி முறையில் மாற்றத்தைக் கட்டாயம் கொண்டு வர வேண்டும். இத்தகைய மாற்றத்திற்கு தொழிற்கல்வி மிக மிக அவசியம்.
     
    என்று பாடினார் நாமக்கல் கவிஞர். ஆம்! இளமைக்காலத்திலேயே நமக்குத் தேவையான தொழில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கற்றோமானால் அத்தொழிலில் நாம் நல்ல திறமை பெறுவோம். வாழ்க்கைக்குத் தொழில் தேவையே என்ற ஏக்கம் நீங்கும்; கவலையின்றி வாழலாம். நாடும் நலம் பெறும். எனவே, நாம் தொழிற்கல்வி கற்றுச் சிறந்து வாழ்வோமாக!.
Previous
Next Post »

3 comments

Click here for comments
Anonymous
10 August 2020 at 03:06 ×

this is so helpfull

Balas
avatar
admin
4 March 2021 at 05:33 ×

Can I get more information

Balas
avatar
admin
31 December 2021 at 21:01 ×

This is very useful and helpful my Tamil studys 😊
Thank you

Balas
avatar
admin
Post a Comment
Thanks for your comment